26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, August 5, 2016

தமிழ் மாநில மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புகுழு
எண்: 1/8/2016  தேதி: 3.8.2016
செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்!
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனங்கள், மகாசம்மேளனங்கள், மாநில அரசு ஊழியர் சம்மேளனம், வங்கிகள், இன்ஷ்யுரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் கூட்டாக செப்டம்பர்-2 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இரண்டாண்டுக்கும்  மேற்பட்ட நரேந்திரசிங் மோடி தலைமையிலான மத்திய NDA அரசு பின்பற்றி வரும் உலகமய – தாராளமய – தனியார் மயக் கொள்கைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதும், மாறாக காண்ட்ராக்ட் உள்ளிட்ட உரிமைகளற்ற அத்துக்கூலி முறைகள் அதிகரித்துக் கொண்டே வருவதும் தான் அரசுத் துறை, பொதுத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் இன்றைய கதி. குறைந்த பட்ச ஊதியப் பாதுகாப்பும் இல்லாமல் கோடிக்கணக்கான அமைப்பு சாரா ஊழியர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசுத் துறை, பொதுத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் கூட தனியாருக்கு பங்குகள் விற்கப்பட்டு தனியார் ஆதிக்கத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. அனைத்து மட்டங்களிலும் PPP என்ற பெயரில் தனியார் பொதுத்துறை கூட்டு ஏற்பாடுகள் என்ற போர்வையிலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிரந்தரத் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளும், தொழிலாளர் நல ஏற்பாடுகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கம் வைக்கும் தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தாக்குதலின் வேகம் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மீதும் பாய்ந்துள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படியாக முதலீடு செய்யப்படுவது கூட கண்காணிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது. இறந்து போன ஏராளமான புதிய பென்ஷன் திட்டம் சார்ந்த ஊழியர்களின் குடும்பங்கள் பென்ஷன் எதுவுமின்றியும், சமூகப் பாதுகாப்பே இல்லாததால் தெருக்களில் வாடும் நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலைமைகள் அனைத்தையும் பரிசீலித்த மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து சம்மேளனங்கள், சங்கங்களின் புதுடில்லி தேசிய மாநாடு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்ததுடன், நாடு தழுவிய இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அறைகூவல் விடுத்தது. உச்சகட்டமாக செப்டம்பர்-2 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ் மாநில மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்திற்கு  முழு ஆதரவைத் தெரிவிக்கின்றது. அத்துடன் செப்டம்பர்-2 அன்று முற்பகலில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பல்வேறு ஓய்வூதியர் அமைப்புகளின் சார்பில் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடும் தொழிலாளி வர்க்கத்திற்கு நம் ஆதரவைத் தெரிவிப்பதென்ற முடிவினையும் ஒருங்கிணைப்புக் குழு எடுத்துள்ளது. மிக சக்தியாகவும் வெற்றிகரமாகவும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை செப்டம்பர்-2 அன்று காலையில் நடத்துமாறு தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
N.L.ஸ்ரீதரன்  அ.சுந்தரம்
     தலைவர் பொதுச்செயலர்

No comments:

Post a Comment